காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்ததால் உறவினர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்கியதால்தான் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று உறவுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும் தாம் கைது செய்ய முன்னர், சந்தேகநபர் அலரி விதையை உட்கொண்டிருந்தார் என்றும் காவல் நிலையத்தில் அவர் வாந்தி எடுத்ததால் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார் என்றும் நெல்லியடிக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நெல்லியடி காவல் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது – 40) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
‘குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் காவல் நிலையத்துக்கு வருகை தராமல் தலைமறைவாகியிருந்தார்.
நேற்றைய தினம் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நிற்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கு சென்ற காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார். தான் அலரி விதை உட்கொண்டதாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததால் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இடம்பெறததால் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை சுயாதீனமாக அறியமுடியவில்லை. #நெல்லியடி #காவலில் #குடும்பஸ்தர் #உயிரிழப்பு