வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.
வடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியிடம் ஆளுனர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த தண்டனைச்சீட்டில் மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் அலுவலகத்தின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மும்மொழி #தண்டனைசீட்டு #சுரேன்ராகவன்