யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான அந்த நிறுவன உத்தியோகத்தர் சுமார் 3 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்..
எனினும் நிதி நிறுவனத்தின் முகாமையாளராகப் பணியாற்றியவரான முதலாவது சந்தேகநபரையும் பணத்தை மோசடியாகப் பெற்றவரான 5ஆவது சந்தேகநபரையும் தொடர்ந்து வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், உத்தியோகத்தர் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர் ஆகிய மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அத்துடன், மூன்றாம் நான்காம் சந்தேகநபர்களான பெண் உத்தியோகத்தர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.
நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், உத்தியோகத்தர் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர் ஆகிய மூவர் சார்பில் முறையே சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வீரகத்திப்பிள்ளை கௌதமன், ந.சிறிகாந்தா ஆகியோர் முன்னிலையாகினர்.
இரண்டாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன், “இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் இரண்டாவது சந்தேகநபர் மோசடியில் நேரடித் தொடர்பற்றவராகக் காணப்பட்டுள்ளார். அதனால் அவரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மன்றுரைத்தார்.
விண்ணப்பத்தை ஏற்ற நீதிவான், இரண்டாவது சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
முதலாவது மற்றும் 5ஆவது சந்தேகநபர்களை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, வழக்கை அன்றைய தினம்வரை ஒத்திவைத்தது.
பின்னணி
யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டது. அதனை நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து தங்க நகை அடகு மீதான முற்பணம் என கணக்குக் காட்டியுள்ளனர்.
எனினும் நிதி நிறுவனத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கு உரிய நகைகள் அடகுப் பிரிவிடம் இருக்கவில்லை. அதுதொடர்பில் கணக்காய்வுப் பிரிவால், நிதி நிறுவன முகாமைத்துவத்துக்கு அறிக்கையிடப்பட்டது.
சுமார் 6 மாதங்கள் இந்தப் பணம் தனிநபர் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் பெறப்படாமல் மோசடியாக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதுதொடர்பில் உரிய பணம் மற்றும் வட்டி அடங்கலாக சுமார் 11 கோடி ரூபா பணத்தை வர்த்தகரிடமிருந்து மீள அறவீடு செய்யுமாறு யாழ்ப்பாணக் கிளை முகாமையாளருக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் கால அவகாசம் வழங்கியிருந்தது.
எனினும் உரிய காலத்துக்குள் பணம் மற்றும் வட்டியை மீள அறவீடு செய்வதற்கு கிளை முகாமையாளர் தவறிவிட்டதால், அவருக்கு எதிராக கொழும்பு பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் முறைப்பாடு வழங்கியது.
அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவு, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளரைக் கைது செய்தது. முகாமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த மாதம் முற்படுத்தினர்.
மேலும் அடகுப் பிரிவில் பணியாற்றிய ஆண் உத்தியோகத்தர் ஒருவரும் பெண் உத்தியோகத்தர்கள் இருவரும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெண் உத்தியோகத்தர்கள் இருவருக்கு பிணை வழங்கிய நீதிமன்று ஆண் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைத்தது.
அத்துடன், பணத்தை மோசடியாகப் பெற்று அதனை அறவீடு செய்யாமல் தலைமறைவாகியிருந்த மாதகலைச் சேர்ந்த வர்த்தகரும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.