கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் போராட்டம் மேற்கொண்டதனையடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்துள்ளது
கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பெற்ற கட்டலோனியாவின் சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கட்டலோனியா நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் அதனை வலியுறுத்தி பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டதுடன் கட்டலோனியா அமைச்சர்கள்; உள்ளிட்ட 9 பேருக்கு, 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
இதனை கண்டித்து கட்டலோனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்; நேற்று முன்தினம் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
அத்துடன் காவல்துறையின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் மேற்கொண்டதனால் பார்சிலோனா நகர் முழுவதுமே போர்க்களமாக காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது #கட்டலோனியா #போராட்டம் #வன்முறை #ஸ்பெயின் #பார்சிலோனா