ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஓகஸ்டு மாதம் 21-ம் திகதி கைது செய்தது. அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. பிணை கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் பிணை மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதன்படி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ தாக்கல் செய்த மனுவில், ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின்னர் பிணை மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்திபிணை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர்.
இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சிபிஐ வழக்கில் பிணை பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடியாக சிறையில் இருந்து வெளிவர முடியாது.
அமலாக்கத்துறை விசாரணை முடிந்ததும், 24ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் மற்றும் பிணை உத்தரவின் அடிப்படையில், ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கப்படுமா? என்பதை சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்யும்.