திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் இன்று ஒக்டோபர் 27 ம்திகதி காலை ஆறு மணி கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆரோக்கியராஜ் – கலாமேரி தம்பதியரின் மகனான சுர்ஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை 26 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் அவரை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல மணி நேரமாக பல குழுவினர் போராடியும் குழந்தையை மீட்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை மீட்புப் பணிகளுக்கு இடையே முதலில் 70 அடி ஆழத்துக்குச் சென்றது. தொடர்ந்து நேற்று இரவு 100 ஆழத்துக்குக் கீழே சென்று விட்டதனால் அவரை மீட்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கீழே தள்ளப்பட்ட சிறுவனின் உடல் மீது மண் விழுந்ததால் அவரை மேலே எடுக்க முடியாமல் உள்ளது.
இந்தநிலையில் தற்போது குழந்தையை மீட்க களம் இறங்கியுள்ள என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி குழுவினர் ‘ரிக்’ எனப்படும் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஆழ்துளைக் கிணற்றின் அருகாமையில் மூன்று மீற்றர் தொலைவில் மற்றொரு குழி தோண்டப்பட்டு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் இந்தக் குழியைத் தோண்டி பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவரை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்தநிலையில் தற்போது ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு குழந்தையை மீட்டெடுக்கத் தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #ஆழ்துளைக்கிணறு #குழந்தையை #குழி #சுர்ஜித்