அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தாங்கள் அடுத்த செமஸ்டருக்கு செல்வதை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த இரவு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தாங்கள் அடுத்த செமஸ்டருக்கு செல்வதை கொண்டாட அம்மாகாணத்தின் கிரீன்வில்லி பகுதி அமெரிக்க நேரம் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் சிதறியடித்து ஓடினர்.
இந்த இரவு நிகழ்ச்சியில் அந்நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமான நபரை கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.