விவசாயிகளின் வருமானத்தைப் அதிகரிக்கும் விதமாக தமிழக அரசு இந்தியாவிலேயே முதன்முறையாகத் சட்டம் இயற்றியுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைக் காக்க அரசு இயற்றிய இந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், அதிக விளைச்சலின் காரணமாக ஏற்படும் விலை வீழ்ச்சியை நெறிப்படுத்தவும், விவசாயிகள் சந்திக்கும் பிற பாதிப்புகளைத் தடுக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் பயன்படும் விதத்தில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதோடு விரைவில் முழு செயலாக்கத்துக்கும் கொண்டுவர வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். #விவசாயிகள் #வருமானம் #சட்டம் #தமிழகஅரசு