வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாம் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள காவற்துறையினர், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர். அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலையில் முறையற்ற வகையில் சோதனையிட முயன்றமையினை தடுத்த நிலையில், முகாமையாளரின் வீட்டைச் சோதனையிடுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்றனர். அதன் அடிப்படையில் வீடு சோதனையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவரில் ஒருவர் கரவெட்டி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கிராம சேவையாளர்.
தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
“காவற்துறையினர் உரியவாறு எனது வீட்டை சோதனையிடக் கோரியிருந்தால் அனுமதியளித்திருப்பேன். அதிகாலை 2 மணிக்கு வீட்டு மதில் பாய்ந்து உள்நுழைந்து எனது வீட்டுக் கதவைத் தட்டிய காவற்துறையினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது” என வங்கி முகாமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீடு சுற்றிவளைப்பு..
Nov 6, 2019 @ 03:47
வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முகாமையாளரின் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகத் தெரிவித்தே காவற்துறையினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 காவற்துறை உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.
11 காவற்துறை உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.
எனினும் காவற்துறையினர் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் வீட்டுகள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக காவற்துறையினர் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகவும் அவர்கள் பயணித்த ஜீப் வாகனமும் அங்கு இருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு வடமராட்சிக்குப் பொறுப்பான உதவிப் காவற்துறை அத்தியட்சகர் இன்று காலை சென்றார். அவரிடம் தனது வீட்டுக்குள் சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவுடன் வருமாறு வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதனால் வல்வெட்டித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு சென்றுள்ளார்.