நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு காவற்துறை அதிகாரிகளும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய இரண்டு கை துப்பாக்கிகளுடன் கினிகத்தேன காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்களில் இருந்த 3 வெற்று ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தேக நபர்களை அடையாளம் காண ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (06.10.19) இரவு 7.30 அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
இதன்போது காயமடைந்த இருவரில் ஒருவர் கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்ற நபர் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு அரசியல் நோக்கம் கருதி நடத்தப்படவில்லை என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.