ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளன. இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ஸவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்காக 60,175 காவற்துறையினர் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.