கடும் ஆர்வமும் போட்டித் தன்மையும் நிறைந்த தேர்தலின் பின்னர் தாம் மக்கள் தீர்மானத்தை மதித்து, இலங்கையின் 7வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட அறிவித்தலை விடுத்திருக்கும் சஜித் பிரேமதாச, தமக்கு வாக்களித்த சகல பிரஜைகளுக்கும், தேர்தல் பிரசாரத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் மேற்கொண்ட தீர்மானத்தைப் பரிசீலித்து தாம் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதென தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதை நாம் கண்டோம். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஜனநாயக ரீதியில் பெற்ற வெற்றியினதும், ஸ்தாபன மறுசீராக்கல்களினதும் பெறுபேறாகும். இதன்மூலம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்ததுடன் சட்டவாட்சியும் நிலைநாட்டப்பட்டது. இந்த நடைமுறையை முன்னெடுத்துச் சென்று ஜனநாயக நிறுவனங்களையும் பெறுமானங்களையும் மென்மேலும் வலுப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்குமாறு புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் அமைதிச் சூழலைப் பேணி, புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கோ, தமக்கோ இம்சைகள் மேற்கொள்ளப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோத்தாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)