குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட சத்தியாக் கிரக போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் மோசமாக தாக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திய குண்டர்கள் வெளியில் இருப்பதாகவும் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சிறையில் வாடுவதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற வரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
பௌத்த பிக்குகளின் காவி உடைகளை களைந்து தாக்குமாறு கூறியது யார் என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவ்வாறு தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தங்காலையில் தமக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 35 காவல்துறை உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மீளவும் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரப் போவதில்லை எனவும் இது ஓர் பழிவாங்கும் செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.