மாவீரர் தின நிகழ்வுகள் வடக்கு கிழக்குப்; பிரதேசங்களின் பல இடங்களிலும் உணர்வெழுச்சியுடன் பரந்த அளவில் நடைபெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் என்று குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை அவர்கள் கசிந்துருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்துள்ளார்கள்.
கடந்த வருடங்களைப் போலல்லாமல், இந்த வருட நிகழ்வு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கண்ணீர் உகத்த கவலைக்குரிய உணர்வு பூர்வ நிகழ்வாக அல்லாமல், அதற்கும் அப்பால் அரசியல் ரீதியான ஓர் உணர்வை வெளிப்படுத்திய அடையாளமாகவும் அது நிகழ்ந்துள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்வதேச நாடுகள் எங்கும் நடைபெற்றுள்ளன. இருப்பினும், தாயமாகிய இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகள் அவற்றில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. அவைகள் தனித்துவமானவை. தனித்தன்மை கொண்டவையாகவும் அமைந்திருக்கின்றன.
போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, நீதி விசாரணை கோரப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தலில் குற்றம் சுமத்தப்பட்டவரே மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு பின்னணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் நடந்தேறியுள்ளது.
யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து அதீத பலத்துடனும், எல்லை மீறிய வகைகளிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்று சர்வதேச அளவில் புதிய ஜனாதிபதியாகிய கோத்தாபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்ட அபாயகரமான நடவடிக்கைகளி;ல் அவருக்கு நேரடியாகத் தொடர்புகள் இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றாக மறுதலித்திருந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் வெளிப்படவில்லை. விடுபடவில்லை.
பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் 13 லட்ச வாக்குகளை மேலதிகமாகப் பெற்று அவர் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ளார். அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளதையடுத்து. முன்னைய நிலையிலேயே அவர் தொடர்ந்தும் செயற்படுவார் என்ற அச்சம் பரவலாக நிலவுகின்றது.
தனக்கு எதிராகக் குற்றம் சுமத்தியவர்களுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் அவர் கடுமையாக நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்வதைப் போன்று அவருடைய ஆரம்பகால நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
நாட்டின் அதிதீவிர குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் அவருக்குக் கீழ் பணியாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா அகிய இருவருக்கும் வழங்கப்பட்டடிருந்த பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டது. தொடர்ந்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பதவிக்குப் பொதுவாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவரே நியமிக்கப்படுவது வழமை.
காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு சப் இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள ஒருவருடைய பதவி நிலைக்கு ஷானி அபேசேகர தண்டனை இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதேவேளை, அவருடன் முக்கிய குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த நிசாந்த சில்வா திடீரென மூன்று பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தினருடன் சுவிற்சலாந்துக்குச் சென்றுள்ளார். திடீரென மெய்ப்பாதுகாப்பு நீக்கப்பட்டதையடுத்து, தனது உயிரச்சம் காரணமாகவே அவர் நாட்டைவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் சுவிற்சலாந்துக்குப் பறந்துள்ளார். இதனை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவே 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 704 புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டு விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா ஆகிய இருவரும் பக்கசார்பான முறையில் தனக்கு எதிராகவும் பக்கசார்பான முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்றும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வேண்டுதலையடுத்து, சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, 11 மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய மிக மோசமான குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் விசாரணைகளை முன்னெடுத்து திடுக்கிடும் தகவல்கள் பலவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவராகிய கோத்தாபாய ராஜபக்சவே உரிய பணிப்புரைகளை விடுத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக 18 ஆம் திகதி பதவியேற்ற சூட்டோடு சூடாக இந்தப் புலனாய்வு அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அதேவேளை இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா சுவிற்சலாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளதையடுத்து, கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தைச் சேர்ந்த உள்ளுர் அதிகாரியாகிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கடத்தப்பட்ட வாகனத்திலேயே சுமார் 4 மணித்தியாலங்கள் கடுமையான விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இனந்தெரியாத நபர்களே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர்கள் சந்திப்பில் வினவப்பட்டபோது தகவல் வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து அரசுக்கு – தங்களுக்குத் தெரியாது என தெரிவித்ததுடன், இது தொடர்பில் பொலிசாரே அறிக்கை வெளியிடுவர் என்று கூறியுள்ளார்.
ஆயினும் இந்தக் கடத்தல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள சுவிற்சலாந்து அரசாங்கம் தனது நாட்டில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து தனது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவர் இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை நேரடியாகச் சந்தித்து, தனது பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதுடன், சுவிஸ் அரசாங்கத்தின் கரிசனையையும் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய பின்புலத்திலேயே மாவீரர் தினம் வடக்கிலும் கிழக்கிலும் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதை இலங்கை அரசும் இராணுவமும் விரும்பியதில்லை. ஜனாதிபதி ராஜபக்ச காலத்தில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மாவீரர்களுக்கான சுடரேற்றலைத் தடுப்பதற்காக ஆலயங்களில்கூட விளக்கேற்றக் சுடாது என்று தடை விதிக்கப்பட்டு இராணுவ கண்காணிப்பு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்திகை விளக்கீட்டுத் தருணமும்கூட வடக்கில் ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்ற முடியாத நிலைமை எற்பட்டிருந்தது. அத்தகைய கடும்போக்கைக் கொண்ட ஆட்சியாளர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள தருணத்திலேயே இம்முறை மாவிரர் தினம் உணர்வுபூர்வமாக முன்னெடு;க்கப்பட்டிருந்தது.
இந்த மாவீரர் தின முன்னெடுப்பானது இராணுவ தடைகள் கொடுபிடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், இது hஜபக்ச ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்ற பொருளுடையதல்ல. அல்லது அடக்குமுறைக்கு எதிரான எழுச்சியுமல்ல. இந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் சிங்களப் பேரினவாதம் வீச்சுடன் தலையெடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையும் போராட்ட நிலைப்பாடும் பெரும் அச்சத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருப்பதையே உணர முடிகின்றது.
பெரும்பான்மை பலத்தின் ஊடாக சிங்கள பௌத்த கொள்கைப் பிடிப்புடன் ஆட்சி பீடமேறியுள்ள கோத்தாபாயா ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்று தற்காலிக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரண்டு அதிஉச்ச பதவிகளும் ராஜபக்சக்களின் கைவசமாகியுள்ள நிலையில் அடுத்த வரவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களிலும் பொதுத் தேர்தலிலும் அவர்களே – பொதுஸன பெரமுனவே பெரும்பான்மையாக வெற்றியீட்டுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.
புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அபிவிருத்தியின் ஊடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற கொள்கைப் பிடிப்பைக் கொண்டுள்ளார். அதேநேரம் தேசிய பாதுகாப்புக்கும் அவர் அதிமுக்கியத்துவம் அளித்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதக் குண்டுத்தாக்குதல்களினால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய தேசிய பாதுகாப்பைத் தட்டி நிமிர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது. அதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்பது ராஜபக்கசக்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. தமிழ் மக்களின் அரகியல் உரிமைக்கான போராட்டமும்கூட அவர்களால் பயங்கரவாதமாகவே நோக்கப்பட்டது. நோக்கப்படுகின்றது. குறிப்பாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடர்து என்பதில் அவர்கள் மிக மிகத் தீவிரமாக உள்ளனர்..
தமிழ் மக்கள் மீண்டும்; ஆயுதப் போராட்டம் ஒன்றை நாடுவதற்கான சூழல் காணப்படாத போதிலும், அத்தகைய நிலைமை ஒன்றை எதிர்பார்க்கின்ற போக்கையே ஆட்சியாளர்களிடம் காண முடிகின்றது. இது இந்த நாட்டின் ஆட்சி அரசியலுக்கு ஒரு நிரந்தரமான கொள்கை நிலைப்பாடாகவே காணப்படுகின்றது.
பன்மைத் தன்மை கொண்டதோர் அரசியல் தீர்;வு ஒன்றின் மூலம் மட்டுமே இந்த நாட்டில் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்பது அரசியல் ரீதியான யதார்த்தமாகும். இதனையே தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள். பேரின மக்களாகிய சிங்கள மக்களுடன் சமஉரிமை உடையவர்களாக, ஆட்சி மற்றும் குடியியில் நிலைமைகளில் சமசந்தர்ப்பங்களைக் கொண்டவர்களாக இணைந்து வாழ வேண்டும் என்பதே அவர்களது அரசியல் விருப்பமாகும்.
ஆனால் அரசியல் தீர்வுக்கும். உரிமைப் பகிர்வுக்கும் இடமில்லை என்பதே ராஜபக்சக்களின் நிலைப்பாடு. தேசிய ரீதியிலான அபிவிருத்தி ஒன்றே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழி என்பதே அவர்களின் அரசியல் தீரமானம். உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்று நடந்து முடிந்தவற்றைப் பேசுவதிலும், அவற்றில் கவனம் செலுத்துவதும் அடிப்படையில் அர்த்தமற்ற நடவடிக்கைகள் என்பதை புதிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாவீரர் தின நினைவுகூரலின்போது உணர்வெழுச்சியுடன் ஒன்றிணைந்த தமிழ் மக்கள் அபிவிருத்தி அரசியல் அல்ல, உரிமை அரசியலே தங்களுடைய நிலைப்பா என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்த pஉள்ளனர்.
ஏழாவது ஜனாதிபதிக்கான தேர்தலின் கூலம் புதிய பாதையொன்றில் – தீவிரமான இனவாதப் போக்கில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கை அரசியலின் போக்கில் அபிவிருத்தி அரசியலும், உரிமை அரசியலும் எதிர் எதிர் முனைகளில் அணிவகுத்து நிற்பதையே காண முடிகின்றது.
அபிவிருத்தி அரசியல் என்பது ராஜபக்சக்களின் அரசியல் கொள்கைகளின்படி உரிமை மறுப்பு அரசியலாகவே தமிழ்த்தரப்புக்கான தரிசனமாகும். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் அரசியல் பூகோள அரசியல் அலையில் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதுவே பிராந்திய அரசியல் போட்டி காரணமாக எழுந்துள்ள அரசியல் சூழல் என்றே கூற வேண்டும்.
பிராந்திய அரசியல் ஒட்டத்திற்கு ஈடுகொடுப்பதற்காக அபிவிருத்தி அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இது புறநிலை அரசியலின் தத்துவம். ஆனால் அகநிலை அரசியலில் உரிமைப் பகிர்வும் பல்லின இறைமையின் உறுதிப்பாடும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அகநிலை அரசியல் என்பது பன்மைத்தன்மை, நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஐக்கியம் என்பவற்றை தேசிய மட்டத்தில் தவிர்க்க முடியாத நிலையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
அகநிலை அரசியல் உறுதியாக இல்லாத நிலையில் புறநிலை அரசியலில் வீச்சுடன் ஈடுபடுவதும், புறநிலை சவால்களுக்கு முகம் கொடுப்பதும் அரசுக்கு கடினமான காரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
அகநிலை அரசியலில் ஏற்படுகின்ற பிறழ்வுகளும் அதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் வெளிச்சக்திகளைக் கவர்ந்திழுப்பதற்கான வாய்ப்புக்களையே உருவாக்கும். வெளிக்சக்திகளின் தலையீடு என்பது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குப் பெரும் சவாலாக மாறிவிடும் என்பதிலும் சந்தேகமில்லை. இது ஒரு வகையில் தேசிய பாதுகாப்புக்கு உள்ளக அச்சுறுத்தலிலும் பார்க்க பெரும் பாதிப்பை – அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்ற ஆபத்தும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
மொத்தத்தில் தற்போதய ஆட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தலைநிமிர்த்தலானது, அபிவிருத்தி அரசியலுக்கும் உரிமை அரசியலுக்கும் இடையிலான முரண் நிலைமைக்கு வழிவகுத்துள்ளதையே உய்த்துணர முடிகின்றது. இந்த இரு சக்திகளும் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொள்ளுமா அல்லது ஒன்றையொன்று அனுசரித்துச் செல்லுமா என்பதை முன்கூட்டியே ஊகித்தறிவது கடினம்.
ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சக்கள் உரிமை அரசியலுக்கு .இடந்தராத ஓர் அரசியல் போக்கை வெளிப்படுத்தியுள்ள போதிலும், இலங்கையின் உள்விவகாரங்கள் சுமுகமான முறையில் கையாளப்படுவதையே இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன. இந்த விருப்பத்தையே அந்த நாடுகள் யுத்தத்தின் பின்னரான சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளன. ஐநாவும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளும் இதனையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளன.
இராணுவத்திற்கும், இராணுவ மயமான அரசியல் போக்கிற்கும் முன்னுரிமை அளிக்கின்ற ராஜபக்சக்களின் ஆட்சி முறையில் சர்வதேச நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அரசியல் அமைப்புக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இன்னும் கூறுவதென்றால், ராஜபக்சக்களின் அரசியல் எழுச்சி, அவற்றால் சந்தேகத்துடனும் ஒரு வகை அச்சத்துடனுமே நோக்கப்படுகின்றன என்றே கூற வேண்டும்.
எனவே அபிவிருத்தி அரசியலுக்கும் உரிமை அரசியலுக்கும் இடையில் எழுகின்ற முரண்பாடான நிலைமைகள் சர்வதேசத்தினால் எப்படி நோக்கப்படும். எத்தகைய அணுகுமுறையை அந்த நாடுகள் கடைப்பிடிக்கும் என்பதெல்லாம் அப்போதைக்கப்போது எழுகின்ற சர்தேச அரசியல் சூழலிலேயே தங்கியுள்ளது.
எனவே, ஏழு தசாப்தங்களாக அரசியல் உரிமைக்காகப் பேராடிவருகின்ற தமிழ்த்தரப்பு நீண்ட போராட்டத்தின் காரணமாக களைப்படைந்துள்ள நிலையில் நாட்டின் இன்றைய புதிய அரசியல் போக்கையும் அரசியல் யதார்த்தைத்தையும் தீர்க்கமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டியது அவசியம்.
—
P.Manikavasagam