சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக சுவிஸ் தூதுவரை பலமுறை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கடத்தப்பட்டதாக கூறப்படும் கானியா பென்னிஸ்டர் பிரான்சிஸ் என்ற அதிகாரி நேற்றும் (10.12.19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது முறையாக முன்னிலையாகி ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த அதிகாரி தெரிவித்துள்ள விடயங்களுக்கும், சுவிஸ் தூதுவர் வழங்கியுள்ள சாட்சியத்திற்கும் இடையில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் தூதுவராலயத்தின் முதல் முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு 7 இல் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், கடத்தப்பட்ட அதிகாரி தான் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் அன்றைய தினம் அவர் சிவப்பு நிற வானில் பயணித்து மாளிகாகந்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.