ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட மேலதிக நீதவான் அத்துல குணசேகர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் 02 அம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக கடந்த மூன்றாம் திகதி கட்டுநாயக்க அஹம்மன்தொலுவ பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செயற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள வாழைச்சேனை பகுதியில் வசிக்கும் 26 வயதான மொஹமது ரிப்கான் என்பவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் இதுவரையில் முழுமையடையாததன் காரணமாக அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்திடம் கோரினர்.
அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனவரி 20 ஆம் திகதி நீதிமன்றத்தை தெளிவுப்படுத்துமாறு குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை ஜனாதிபதியுடன் தொடர்புகளை பேணுவதாக தெரிவித்து மோசடிகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்த கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை தலைமையகத்தின் காவற்துறை அதிகாரி ஒருவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்புச் அமைச்சு பொது மக்களை கேட்டுள்ளமை குறிப்பிடதக்கது.