குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரிச் சலுகைத் திட்டம் வழங்குதவற்கான 27 சர்வதேச நிபந்தனைகளை வெற்றிகரமாக இலங்கை அமுல்படுத்தியுள்ளதாக ஐரோப்பா ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை உள்ளிட்ட விடயங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிச் சலுகைக்கு அமைய இலங்கையில் இருந்து ஐரோப்பா சங்கத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும்; பொருட்களுக்கு 66 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்தும் அவதானிக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
விரைவில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.