Home இலங்கைமன்னார் தோட்டவெளியில் மணல் அகழ்வு – காவல்துறையினருக்கும் மக்களும் இடையே முறுகல்.

மன்னார் தோட்டவெளியில் மணல் அகழ்வு – காவல்துறையினருக்கும் மக்களும் இடையே முறுகல்.

by admin

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளுர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்களின்றி தென்பகுதி அரசியல் வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளப்புக்கென கையில் வைத்திருப்பதாக தெரிவித்து காவல்துறையினரின்  துணையுடன்  மணல் அகழ்வு செய்து வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் காவல்துறை அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று புதன்கிழமை ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ் பகுதி சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது.

மன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ் சம்பவம்பற்றி தெரிய வருவதாவது,,,

மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது மணல் அகழ்வு செய்யப்பட்டு மண் வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகின்றன.

இச் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றன. குறித்த விடயம் தொடர்பில் இப்பகுதி மக்கள் மன்னார் பிரதேச சபை, மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் முறையீடு செய்தும் எந்த வித பலன் அளிக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை (18.12.2019) காலை இவ் பகுதியில் மணல் அகழ்வு செய்ய வேண்டாம் என இப் பகுதி பங்கு தந்தை அருட்பணி அலெக்சாண்டர் பெனோ சில்வா அடிகளாரின் தலைமையில் இப் பகுதி கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் மணல் அகழ்வு செய்வோருக்கும் இடையில் ஓர் கலந்துரையாடல் நடைபெற்று ஒரு சுமூக நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இவ் கலந்துரையாடல் இடம்பெற்று சற்று நேரத்தின் பின் காவல்துறை அதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் மீண்டும் மணல் அகழ்வு செய்து வெளியில் எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் அப்பகுதி மக்கள் மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை செல்ல அனுமதிக்காது வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் சம்பவ இடத்துக்கு வந்த பங்குத் தந்தையுடனும் பொது மக்களுடனும் சம்பவ இடத்தில் நின்ற காவல்துறை அதிகாரி முரண்பட்டதால் நிலைமை மோசமாகியது.

அருட்பணியாளருடன் முறுகல் நிலையை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி அருட்பணியாளரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அங்கு சுமூக நிலை ஏற்பட்டது.  #மன்னார்  #மணல்அகழ்வு  #முறுகல்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More