முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு நிரந்தர நீதாய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (19.12.19) உத்தரவிட்டுள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட சாட்சி விசாரணைகள் மற்றும் வாய்வழி சமர்ப்பிப்புகளின் பின்னர் வழக்கு விசாரணையை கடந்த 4 ஆம் திகதி நிறைவு செய்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழக்கின் தீர்ப்பினை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.