ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்சிற் மசோதா, பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 12-ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரெக்சிற் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்கப்போவதில்லை என வாக்குறுதியளித்திருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரெக்சிற் தொடர்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு சட்டவடிவமளிக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிரம் காட்டிய நிலையில் பிரெக்சிற் மசோதாவை, சில திருத்தங்களுடன், பாராளுமன்ற கீழ்சபையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரேக்சிற் மசோதாவை ஆதரித்து 358 வாக்குகளும், எதிராக, 234 வாக்குகளும்; கிடைத்ததைதையடுத்து, மசோதா 124 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் இந்த மசோதா மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேல்சபையில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதும், ஜனவரி 31-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி வெளியேறும்.
எனினும், சில நிதி விவகாரங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளதால், அதிகாரபூர்வமாக வெளியேற, மேலும் இரண்டு ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது