குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் உயிரிழப்புகளும் இடம்பெற்றிருந்மதன.
தமிழகத்திலும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டதனை தொடர்ந்து இன்று பேரணி திட்டமிட்டபடி நடைபெற்றது.
எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றிருந்தனர். பேரணியில் பங்கேற்க 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பல அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோரும் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.
பேரணியையொட்டி எழும்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் கலவரம் ஏற்பட்டால் தண்ணீரை பிரயோகித்து கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து புறப்பட்ட பேரணி லேங்ஸ் கார்டன் ரோடு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானத்தினை சென்றடைந்தது.
அங்கு தலைவர்கள் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் ஏறிய தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். பேரணியின் தொடக்கத்திலும், இறுதியிலும் காவல்துறையினர் அணிவகுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #குடியுரிமை திருத்தசட்ட #எதிர்ப்பு #திமுக #பேரணி