Home இலங்கை தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு – இரணைமடுக் குளம் விஸ்தரிக்கப்படும்…

தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு – இரணைமடுக் குளம் விஸ்தரிக்கப்படும்…

by admin

தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு. இந்தியாவின் அனுசரனையை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டம்..

தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று(29.12.2019) நடைபெற்ற இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின்(VTA) கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய தொழிற் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மைக்காலமாக தொழில்சார் தகமைகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர் யுவதிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்ததுடன் இவ்வாறானவர்கள், தங்களுடைய தகமைகளுக்கு ஏற்றவகையில் தொழில் வாய்ப்பினை பெற்று கௌரவமாக வாழுகின்ற சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளினால் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதாவது, துணை மருத்துவ சேவைகள், சூரிய மின்கலம், மற்றும் ஹபிறிட் வாகன தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி நெறிகளை கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தர வேண்டும் எனவும் தங்களுடைய பயிற்சி நெறிகளை விரிவுபடுத்துவதற்கு பெரும் சவாலாக இருக்கும் கட்டிட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதாகவும் ஏனைய விடயங்களுக்கும் முடியுமான விரைவில் தீர்வை காணுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்;திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை

இரணைமடு குளத்தினூடாக மேலும் பெருமளவு மக்கள் பலனடையும் வகையில் அதனை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான நிதியினை அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இரணைமடு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்தை இன்று(29.12.2019) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கின்ற நீரை சேமித்து கிளிநொச்சி உட்பட நீர் தேவையான மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த திட்டத்தினால் எந்தவொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், இரணைமடு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எடுத்துக்கூறி அடுத்த வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்

அதேவேளை, இரணைமடு நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த பிரதேச மக்களும் இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வருடந்தோறும் இரணைதீவு குளத்தில விடப்படுகின்ற மீன் குஞ்சுகளின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்; வருட ஆரம்பத்திலேயே அவை குளத்தில் விடுபடுமானால் அதிகளவான மீன் அறுவடையை தங்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவதானம் செலுத்திய  அமைச்சர் , குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையிலான இயந்திரப் படகு ஒன்றையும் பெற்றுத்தருமாறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் வேண்டுகோள்; முன்வைக்கபட்ட நிலையில், முடிந்தளவு விரைவில் அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More