திருகோணமலை – கன்னியா வெந்நீருற்று மற்றும் பிள்ளையார் கோவில் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீருற்று வழக்கில் இடைமனுதாரர்களின் மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. வில்கம் விகாரை விகாராதிபதி தன்னை இடை மனுதாரராக அனுமதிக்குமாறு கோரி விண்ணப்பித்திருந்தார்.
இதனை எதிர்த்து வாதாடிய மனுதாரர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வில்கம் விகாரை விகாராதிபதிக்கு இதில் எவ்வித சட்டப்பூர்வமான உரித்தும் கிடையாது என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி இடை மனு சம்பந்தமான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் அறிவித்தார்.