கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். காவற்துறையினரும் விசாரணை நடத்திவருவதாக அமைச்சர் கூறினார்.
எவ்வித அச்சமும், தயக்கமும், இடையூறும் இன்றி மாணவர்கள் உயர் கல்வியை தொடர வேண்டும் என்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கொள்கை எனவும் அதனை மீறுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பகிடிவதை தொடர்பில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பகிடிவதை சம்பவம் தொடர்பிலேயே கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா என்.விஜேரத்ன தெரிவித்தார். கறுவாத்தோட்டம் காவற்துறையினருக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த 7 ஆம் திகதி மாலை மோதல் இடம்பெற்றிருந்தது.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர், முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள்ளும் பொரளையிலுள்ள மாணவர் விடுதியிலும் வைத்து கடந்த சில தினங்களாக பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாம் வருட மாணவரொருவர் தாக்கப்பட்டிருந்தார். தாக்கப்பட்ட மாணவரின் காதுப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கறுவாத்தோட்டம் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்கள் நேற்று பகல் காவற்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களையும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.