மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(05) அதிகாலை இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸ்சாந்தன் தெரிவித்தார்.
மன்னாரில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் காவற்துறையினர் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதற்கமைவாக மன்னார் மாவட்ட காவற்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் காவற்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைவாக யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவர் உற்பட மூவர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஈடுவைக்கச் சென்ற போது குறித்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கொள்ளைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருகின்றது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ‘தாழிக் கொடி’ உட்பட ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் காவற்துறையினர்தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சனிக்கிழமை கீரி பகுதியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் மன்னார் காவற்துறையினர் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரனைகளுக்கு அமைய கொள்ளைச் சம்பவத்துடன் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் வெகு விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.