மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.
இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கைது நடவடிக்கைகளின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் சட்ட நடைமுறைகளை முழுமையாக பேணுமாறும் ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு
கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்த்திற்கும் பெரிதும் பாதிப்பு செலுத்தக் கூடியது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாகவும் சட்ட திட்டங்களை முழுமையாக பேணியும் நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும் என்றும் அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணையின்றி இடம்பெறுவதை உறுதிசெய்துகொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்கள் தொடர்பில் மேற்படி கடமையினை நிறைவேற்றும் போது பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.
மேலும் இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து இலங்கைப் பிரஜைகள் தொடர்பிலும் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஏற்புடையதாகும் என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளி நோக்கங்களுக்காக செயற்படக் கூடாது என்றும் எவ்வித தேவையற்ற அழுத்தங்களுக்கும் அடிபனிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது – ரஷ்ய வெளி விவகார அமைச்சர்
இலங்கைக்கான விஜயம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் தெரிவித்தார்.
தான் இலங்கையில் ரஷ்ய தூதரகத்தில் சேவையில் இருந்த போது இருந்த நிலைமைகளை பார்க்கிலும் நல்ல மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி, மனிதாபிமான அபிலாஷைகள், இராணுவ ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கும் அமைச்சர் லெவ்ரோவ் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக ஜனாதிபதி அவர்கள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் புதிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ரஷ்யா கெடட் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தமையை நினைவுகூர்ந்த வெளிவிவகார அமைச்சர் தற்போது அம்மாணவர்களின் தொகை 70ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்ரி உள்ளிட்ட ரஷ்ய பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்ற வகையில் எம்சீசி உடன்படிக்கை தொடர்பில் மக்களின் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் –
ஜனாதிபதி அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவிப்பு
அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்பதால் மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
குறித்த முன்மொழிவுகள் தற்போது நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (14) பிற்பகல் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் வேல்ஸ் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து நிபுணர் குழு விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
துரித பொருளாதார அபிவிருத்தியுடன் வறுமையற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவது தனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை வலுவூட்டுவதற்கு எளிமையான வரி முறைமையையும் தேவையான வசதிகளையும் வழங்கும் வர்த்தக சூழலை நாட்டில் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தொழிற்துறை அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ள முக்கிய துறைகளுல் சிலவாகும். தற்போது அமெரிக்கா இலங்கையின் ஆடை தொழிற்துறையில் முக்கிய கொள்வனவாளராக உள்ளது. அதேபோன்று இலங்கை தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட துறைகளின் அபிவிருத்திக்கும் தயாராக இருப்பதால் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்ய தான் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார்.
உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் ஒரே நாளில் இலங்கைக்கு…
உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்தனர்.
வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தனது பதவிக் காலத்தினுள் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய பிரதிநிதிகள், இலங்கை ஆரம்பித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.
அச்சத்திற்குள்ளாகியிருந்த சமூக மற்றும் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதை அனைத்து பிரதிநிதிகளும் பாராட்டினர்.
ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ள அனைத்து துறைகளிலும் துரித அபிவிருத்தியை அடைந்து நாட்டை முன்கொண்டு செல்லும் முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பொருளாதார ரீதியாக பலமாக இருக்கவே நாம் விரும்புகின்றோம் – சீனாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
‘இலங்கை சிறியதொரு நாடு. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ பூகோள ரீதியில் அதன் அமைவிடம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் காரணமாக பல்வேறு அரசியல் சவால்களுக்கு இலங்கை முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அவற்றை வெற்றிகொள்வதற்கு ஒரே வழி பொருளாதார ரீதியாக பலம் பெறுவதாகும். பொருளாதார சுதந்திரம் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்.’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ (Wang Yi) அவர்களை இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சீன அமைச்சர் கடந்த காலங்களைப் போன்றே சீனா இலங்கையின் சுபீட்சத்திலும் முன்னேற்றத்திலும் நீண்ட கால பங்குதாரராக இருக்கும் என்று குறிப்பிட்டார். இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கை உறுதியானது என்றும் சீனா எப்போதும் இலங்கையின் விசுவாசமான நண்பர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களின் வாழ்த்துக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு தெரிவித்து சீன வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடலை ஆரம்பித்தார்.
ஜனாதிபதி அவர்களுடனான விரிவான கலந்துரையாடலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான இருதரப்பு உறவுகள் மேலும் முன்னேற்றமடையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
சீன அமைச்சரின் வாழ்த்துக்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களை மதிப்பதாகவும் அவரது உரைகள் மற்றும் கூற்றுக்களை ஆழ்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களின் சில கொள்கைகளை குறிப்பாக வறுமையை ஒழிப்பது தொடர்பான விடயங்களை தனது கொள்கை பிரகடனத்திலும் உள்ளடக்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து ஜனாதிபதி அவர்கள் சீன அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
சீனாவுக்கு தான் மேற்கொண்டுள்ள பல விஜயங்கள் பற்றி நினைவுகூர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சீனா தனக்கு ஒரு புதிய நாடல்ல என்றும் குறிப்பிட்டார்.
‘இலங்கையின் மூலோபாய பங்குதாரர் என்ற வகையில் சீனா தொடர்ச்சியாக இலங்கையின் அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கும். நாட்டின் இறைமை, பௌதீக ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்திற்காகவும் சீனா பக்கபலமாக விளங்கும். இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிச் சக்திகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்’ என்றும் சீன அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையை பொருளாதார ரீதியாக சுயாதீனமாக எழுந்திருக்கச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அர்ப்பணிப்பு பற்றி கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சர், அடுத்த மாதம் இடம் பெறவுள்ள ஜனாதிபதி அவர்களின் சீன விஜயத்தின் போதும் தொழிநுட்பம், சுற்றுலா, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய துறைகளில் இலங்கைக்கு உதவக்கூடிய தரப்புகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அந்த விஜயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
‘இலங்கையின் நிலப் பரப்பு சிறியதாயினும் மிக விரைவாக பொருளாதார ரீதியாக அது பலமடையும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும்’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan, சீன வர்த்தக அமைச்சின் பிரதி அமைச்சர் Qian Keming, சீன சர்வதேச அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு முகவர் அமைப்பின் பிரதி அமைச்சர் Zhou Liujun, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)
2020.01.14