இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க இந்தியா நிதி உதவி வழங்குவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா 50 மில்லியன் டொலர் நிதி வழங்குவது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கொடுக்கும் நிதியை பயன்படுத்தி ஈழத்தமிழர்களை சிங்கள அரசு ஒடுக்கக்கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளதோடு இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்யக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈழத்தமிழர்கள் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு கொடுத்த உறுதிமொழியை இலங்கை அரசு காப்பற்றவில்லை என்றும், இந்த சூழலில் இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன? எனவும் ராமதாஸ் வினவியிருக்கிறார்.
ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் இருப்பதாகவும், இந்த நிலையில் அந்நாட்டு அரசுக்கு இந்தியா நிதி உதவி செய்வது வெகுமதியாக தான் அமையும் எனவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஒடுக்கும் இந்தியாவிடம் இருந்து பெறும் நிதியை கொண்டு ஈழத்தமிழர்களை தான் சிங்கள அரசு ஒடுக்கும் என்றும், இதனால் இலங்கைக்கு எந்த நிதி உதவியும் இந்திய அரசு செய்யக்கூடாது என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.