யாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இளைஞர் ஒருவர் கோரியதாக கூறி இராணுவத்தினர் இளைஞனை மிரட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
சுழிபுரம் பாணாவெட்டி பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கள்ளு தவறணை ஒன்று உள்ளது. தவறணைக்கு வருபவர்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வந்தனர். அதனால் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரி வந்தனர்.
அதன் ஒரு கட்டமாக தமது கோரிக்கையை சங்கானை பிரதேச செயலரிடமும் முன் வைத்தனர். அதனை அடுத்து பனை தென்னை வள அபிவிருத்தி சங்கத்தினரையும் அப்பகுதி மக்களையும் பிரதேச செயலகத்திற்கு அழைத்து அது தொடர்பில் பிரதேச செயலர் அவர்களுடன் பேச்சுக்களை நடாத்தினார்.
அதன் போது, தமது சங்கத்திற்கு சொந்தமான காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் தான் தற்காலிகமாக இந்த இடத்தில் தவறணை உள்ளது. இராணுவத்தினர் தமது காணியினை விடுவார்கள் என்றால் தவறணை அந்த காணிக்கு மாற்றப்படும் என பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்.
அதனை அடுத்து பிரதேச செயலர் , இராணுவத்தினர் காணியினை மீள வழங்கும் வரையில் தவறணை தற்போது இயங்குமிடத்தில் இயங்கட்டும். ஆனால் அதன் சுகாதாரம் உரிய முறையில் பேணப்பட வேண்டும் அத்துடன் அங்கு வருபவர்களால் அப்பகுதி மக்களுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது. அதனை சங்கத்தினரே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.
அதனை தொடர்ந்து பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் எனவும் , அந்த இடத்திற்கு மீண்டும் தவறணை இடமாற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் மனு ஒன்றினை பிரதேச செயலகத்திடம் கையளித்தனர்.
இந்நிலையில், இராணுவத்தினரை வெளியேற வேண்டும் என கோரி மனு கையளிக்க இளைஞர் ஒருவரே தூண்டுதலாக செயற்பட்டார் என கூறி இராணுவத்தினர் இருவர் , குறித்த இளைஞனின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளனர். அந்நேரம் இளைஞன் வீட்டில் இல்லாததால் , அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்று தொடர்பு கொண்டு சுழிபுரம் இராணுவ முகாமுக்கு விசாரணைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அறிவுறுத்தியுள்ளனர்.
அதனை அடுத்து நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த இளைஞன் ஊரவர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, இராணுவ முகாமுக்கு விசாரணைக்காக சென்றுள்ளார்.
அங்கே இளைஞனை மட்டும் தனியே முகாமுக்குள் அழைத்த இராணுவத்தினர், இராணுவ முகாமை அகற்றுமாறு மக்களை தூண்டி விட்டது நீ தானே என விசாரணை செய்துள்ளனர். அதற்கு குறித்த இளைஞன் தான் அவ்வாறு யாரையும் தூண்டி விடவில்லை என கூறியுள்ளார். அதன் பின்னர் அதனை எழுத்து மூலம் தருமாறு இராணுவத்தினர் கோரி எழுத்து மூலம் பெற்று விட்டே இளைஞனை முகாமில் இருந்து விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஊரவர்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை காணப்பட்டது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் மக்கள் முறையிட்டனர். அது தொடர்பில் நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களிடம் பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும், அவர்களுக்கு விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்ததுடன், இராணுவத்தினர் விசாரணைக்கு அழைத்தமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு இளைஞனுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனைக்கு அமைவாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.