யாழ். மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,
“மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்த சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகரித்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட ஒருவரை தேடி வெள்ளை வாகனத்தில் வந்த 4 போ் அவரிடம் விசாரணை நடத்தினர் அதேபோல் மற்றொருவரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவா்கள் யாா்? போன்ற தகவல்களை பெற்றுச்சென்றனர்.
படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது” என மேலும் தெரிவித்தனர்.
பின்னணி.
கடந்த 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.
அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.
இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது.
இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார்.