ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் நேற்று (23.01.20) அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடா்பாக இந்திய அரசியல் சட்டப் பிரிவு 161 இன் கீழ் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இது புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 7 பேரின் விடுதலை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய பா.ஜ.க அரசு மதிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த தீர்மானம் 15 மாதங்களுக்கு மேல் தமிழக ஆளுநரிடம் உயிரற்ற நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவை மேற்கோள் காட்டி ஆளுநரை உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, 7 பேரின் விடுதலைக்கான ஒப்புதலைத் பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.