வீசா வழங்குவது இடைநிறுத்தம்
சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க கட்டுப்பாடு
வௌிநாட்டுக்கு செல்லும் அல்லது வௌிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் தவிர்ந்த அவர்களின் உறவினர்களுக்கு விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (28) காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகைதருவதற்கு முன்னர், இணையத்தளம் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவிலிருந்து வருகைதருபவர்களை இலகுவாக பரிசோதிக்க முடியும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க கூறியுள்ளார்.
முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டார்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
’மக்கள் அச்சப்படத் தேவையில்லை’
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.
அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.