மாகாண சபைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை மாகாண சபைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்டமூலத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே வறுமை தலைவிரித்தாடும் மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ள நிலையில் அங்கு ஈட்டப்படும் வருமானமும் மத்திய அரசுக்கு செல்வதால் கிழக்கு மாகாணத்துக்கு நிதி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சத்துடன் மாகாணத்தை அதள பாதாளத்துக்கு இட்டுச்செல்லும் நிலைமையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் வெள்ளை யானைகள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மேற்படி தெரிவித்த அவர் மாகாண சபைகளின் செயற்திறனை குன்றவைக்கும் வகையில் திட்டமிட்டு சபைக்கான நிதியை குறைத்து விட்டு அதன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது எந்த வகையில் நியாயமாகும் எனவும் கேள்வியெழுப்பினார்.
மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாண சபை பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது செயற்திறனை நிரூபித்துள்ளதாகவும்; ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்