சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுபோலவே சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரின் சார்பிலும் சட்டமன்றச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (பெப்ரவரி 17) திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை விதி 173-ஐ சுட்டிக்காட்டி, ‘ஒரு கூட்டத் தொடரின்போது விவாதிக்க முடியாது எனவும் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது’ எனவும் தெரிவித்ததோடு, ‘ சிஏஏ பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டும் பேரவையில் பேச அனுமதி அளிக்கப்படும் எனவும் சிஏஏ தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துவிட்டோம்’என்ற தகவலையும் தெரிவித்தார். #சிஏஏவு #தீர்மானம் #சபாநாயகர் #தனபால்