Home இலக்கியம் பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம் – கலாநிதி சி. ஜெயசங்கர்…

பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம் – கலாநிதி சி. ஜெயசங்கர்…

by admin

பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம்
அரச நாடகவிழா – 2020
25.02.2020 மாலை 6.30 மணி
எல்பின்ஸ்ட்டன் அரங்கு
மருதானை, கொழும்பு.

பூவின் மீதமர்ந்தும், அமராமலும் மெல்லப் படபடக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெதுமை போன்றது பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம். பயங்கரமாகவே வெளித்தெரியும் போர்க்கால வாழ்வும்; வெளித்தோற்றப்பாட்டில் பெருமிதமாகவும், உள்ளார்த்தமாகப் பயங்கரமாகவும், வன்முறையான சமூக வாழ்வில் சற்று விலகிச் சிந்திக்க முனையும் அல்லது யதார்த்தத்தை நோக்கி நகர முனையும் சிறிசொன்றின் துயர வாழ்வும், அதனை விளங்கமுனையாத சமூக இருப்பும் மீதான எதிர்வினைதான் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம்.

நடைமுறையிலுள்ள சமூக வாழ்க்கை முறையும், நடைமுறைக் கல்வி முறையும் மேலதிகமாக குரூரமான போர்க்கால வாழ்க்கைச் சூழலில் துளிர்களாகவும், மொட்டுக்களாகவும் அரும்பும் சிறார்களின் கற்பனையை, சிந்தனையை, படைப்பாற்றலை, மதிப்பீட்டுத் திறனைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கும் வகையினை அம்பி என்னும் பாத்திரத்;தைச் சுற்றிச் சுழன்று வெளிப்படுத்துகின்றது ‘பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி’ நாடகம்.

வெற்றிக்காகவும், பெருமிதத்துக்காகவும், நல்லதுக்கெனவும் இளையோர்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கி, உளச்சிக்கலுக்கு உட்படுத்தி மனநலம் குன்றியவர்களாக, வன்முறையாளர்களாக உருவாகுவதற்கான சூழ்நிலையே சமுகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை உளநலக் காப்பகங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைத்துவிட்டு, குற்றத்தை எங்கேயோ? எதிலேயோ? வாய்ப்பான இடத்தில் போட்டுவிட்டு, தொடர்ந்தும் கேள்விக்கிடமற்ற அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதே வாழ்க்கையாகிறது, வரலாறாகிறது, பண்பாடாகிறது, அரசியலாகிறது. நல்லது என்ற பெயரிலும் , பாதுகாப்பு என்ற பெயரிலும் குடும்பத்திலிருந்து சமூகமீறாக அரசுவரை கட்டிக்காத்துவரும் ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைகளின் வெளிப்பாடுகள், அவற்றின் விளைவுகள் என்பனவற்றைப் ‘பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சி’ நாடகம் சித்திரிக்கின்றது.

‘நீ அழைத்ததாக……… ஒரு ஞாபகம்………’ என்ற வி.கௌரிபாலனின் சிறுகதையே இந்நாடகத்தின் மூலமாக அமைகிறது. கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மன்றத்தால் அனைத்துப் பல்கலைக்கழக நாடக விழாவில், 2000 ஆம் ஆண்டு கொழும்பில், குடiபாவடநளள டீரவவநசகடநைள என்ற பெயரில் ஆங்கிலத்தில் அரங்கேற்றப்பட்டு, மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டது இந் நாடகம்.

சி.ஜெயசங்கரின் இணைப்பாக்கத்தில், களப்பயிற்சி அரங்கின் ஊடாக புதிதளித்தல் முறையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் உருவாக்கப்பட்ட இந் நாடகத்தின் ஆங்கில எழுத்துப் பனுவலை எஸ். எம் .பீலிக்ஸ் அவர்களும், தமிழ் எழுத்துப் பனுவலை வி.கௌரிபாலனும் எழுத்துரவாக்கம் செய்திருந்தார்கள். இந்த நாடக அரங்க உருவாக்கத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டில் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம் மேடையேற்றப்பட்ட போது, மக்கள் நீதித்துறை மீது கொண்டிருந்த கணிசமான நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. இன்றைய யதார்த்த நிலை எந்தளவிற்கு இருக்கின்றது என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும் இந் நாடகம் வாய்ப்பளிக்கும் என்று நம்பப்படுகின்றது. மீண்டும், 2020 இல் அ.விமலராஜின் நெறியாள்கையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் குறித்த நாடகத்தில் பங்கெடுக்கிறார்கள். அ. விமலராஜ் நம்பிக்கை தரும் இளம் நாடகக்காரர்; சினிமாவும் அவருக்குக் கைவந்தது. அரங்கின் உள்ளும்,புறமும் இலங்கை அரங்க சூழலின் இளம் ஆளுமைகள் பங்கெடுக்கின்றார்கள். 2020இல் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் புதிய அனுபவத்தையும், புதிய சிந்தனையையும் தருவதாக அமையட்டும்! பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகளை முன்வைத்து உரையாடல்கள் தொடரட்டும்!.
கலாநிதி சி. ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More