பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில்லை. சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையினை குறித்த விசாரணைக் குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு காவற்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என யாழ்.பல்கலைகழக பதிவாளரால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட புதுமுக மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி ஊடாக பாலியல் ரீதியாக பகிடிவதை புரியப்பட்டதாக 06.02.2020 திகதியிலிருந்து வெளியாகிய செய்திகளினையடுத்து இப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்களால் அவசர விசேட சந்திப்பு ஒன்று 07.02.2020 அன்று கூட்டப்பட்டது.
இச் சந்திப்பில் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயவும் இச் செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை இனங்காணவும் ஓர் பூர்வாங்க விசாரணை நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டு ஐவர் அடங்கிய வி்சாரணைக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு முறையான விசாரணைக் குழுவை நியமித்து சம்பந்தப்பட்ட மாணவர்களை இனங்கண்டு உறுதிப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
இக் குழு 07.02.2020 திகதியன்றே தனது விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்ததுடன், ஏழு தடவைகள் மாணவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும் சேகரித்திருந்தது. மேலும் இக்குழுவின் பரிந்துரையுடன் இப் பல்கலைக்கழகம் சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் நிலையம் ஊடாக தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்துக்கு (National Centre for cyber security) அனுப்பியுள்ளது.
குறித்த விசாரணைக் குழு சமூக வலைத்தள ஊடங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியான பகிடிவதை புரியப்பட்டதா என்பதையும் குறித்த புதுமுக மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் இதைவிட வேறு ஏதேனும் வகையில் பகிடிவதைக்குள்ளாகியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்குடன் செயற்பட்டது.
குறித்த பூர்வாங்க விசாரணை 16.02.2020 அன்று முடிவுறுத்தப்பட்டது அதனது அறிக்கை 18.02.2020 அன்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
இப் பல்கலைக்கழகம் முறையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப் பூர்வாங்க விசாரணை அறிக்கை தொடர்பான சுருக்கமான அம்சங்களை பின்வரும் காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்துகிறது.
1. சமூக ஊடகங்களில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என வெளிவந்த செய்திகளிலும் விசாரணை நடத்திய முறை தொடர்பாக வெளிவந்த சில செய்திகளிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை.
2. சில மாணவர்களது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களும் சிலரின் புகைப்படங்களும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அம் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை. இப் பல்கலைக்கழகத்தினால் இது தொடர்பாக நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணை அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு;
1. வட்ஸ்அப் உரையாடல் மூலம் சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்கள் என்ற படிநிலையை இப் பீடத்தில் அமுல்படுத்தும் நிலையிலான பகிடிவதைகள் இடம்பெற்றுள்ளன.
2. இங்கு சிரேஷ்ட மாணவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இப் பீடத்தின் 3ஆம் அணி மாணவர்களாவர்.
3. சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த பின்னர் (06.02.2020ஆம் திகதியிலிருந்து) பல்கலைக்கழக நிர்வாகத்தின் விசாரணைகளில் இடையூறு செய்யும் வகையிலான அல்லது கனிஷ்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளும் (Text messages) ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளும் (voice messages) வட்ஸ்அப் உரையாடல்களில் சிரேஷ்ட மாணவர்களால் கனிஷ்ட மாணவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன.
மேற்குறித்த காரணங்களால் 6 மாணவர்களுக்கு மேலதிக விசாரணைகளுக்குத் தடை ஏற்படாத வகையில் தற்காலிகமாக பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாணவர்கள் மேற்படி விடயங்களுக்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 12 மாணவர்களிற்கும் எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது.
இதுவரை இப்பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் ரீதியான உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான வட்ஸ்அப் Screenshot தொடர்பாக எந்த சிரேஷ்ட மாணவனும் இனங்காணப்படவில்லை. இன்னும் அனைத்துப் புதுமுகத் தமிழ் மாணவர்களிடையேயும் அவர்களது பெற்றோர்களிடையேயும் வழங்கிய பெயர் இடப்படாமல் பதிலளிக்கவேண்டிய வினாக் கொத்துக்களில் பகிடிவதை தொலைபேசி உரையாடல்கள் மூலம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பாலியல் ரீதியான பகிடிவதை நடைபெறவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூக வலைத்தளங்களில் முதலாவதாக வெளியாகிய சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை உடைய பெரும்பாலான மாணவர்கள் குறித்த பிரச்சினைக்குரிய வட்அப்ஸ் குழுவின் உரையாடல்களில் எந்தவிதமாகவும் தங்களை ஈடுபடுத்தாதவர்கள் என்பது குறித்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் பொலிஸ் நிலையத்தினூடாக அவ்விலக்கங்கள் தொடர்பாக இடம்பெற்ற உரையாடல்களின் வரலாற்றைப் (Call history) பெற்றுத் தருமாறு தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்துக்கு (National Centre for cyber security) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் 5 மாணவர்களது புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இதில் மூன்று மாணவர்கள் எந்தவித தொலைபேசி உரையாடல்களிலும் இப் புதுமுக மாணவர்களுடன் குறித்த வட்ஸ்அப் குரூப் மூலம் ஈடுபடவில்லை என்று கண்டறியப்பட்டது.
மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியான கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மூலமோ புகைப்படங்கள் மூலமோ அடையாளம் காணப்படாத மாணவர்கள் இக்குறித்த பகிடிவதை உரையாடல்களில் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இது இவ்வாறிருக்க குறித்த பகிடிவதைச் செயற்பாடுகளிலும் எந்தவிதத்திலும் ஈடுபடாத மாணவர்களது விவரத்தை சில சமூக வலைத்தளங்கள் ஏன் வெளியிட்டன என்பது தொடர்பாகவும் இதன் பின்புலம் தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தொலைபேசி இலக்கங்களும் சில மாணவர்களது புகைப்படங்களும் வெளியானதாலும் இவர்களே குறித்த பகிடிவதைச் செயல்களில் ஈடுபட்டனர் எனக் குறிப்பிட்டதனாலும் அம் மாணவர்களுக்குத் தெரியாத பல தொலைபேசி இலக்கங்களில் (வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் உள்பட) இருந்து தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசி உள்ளதுடன் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் வெளிவந்த சில மாணவர்கள் தமது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை இன்னும் காணப்படுகிறது. இம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இச் செயல்களுடன் இதுவரைக்கும் எதுவித சந்தேகங்களும் எழாத நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து இப் பல்கலைக்கழகம் மிகுந்த கவலை கொள்கிறது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்கள் பொறுப்பாகவும் ஊடகத்திற்கே உரிய நெறிமுறைகளுடனும் செயற்படுமாறு இப்பல்கலைக்கழகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையினை குறித்த விசாரணைக் குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பான முறையான விசாரணை ஒன்று நிறைவடைந்து இப்பல்கலைக்கழகத்துக்கு உரித்தான ஒழுக்காற்று முறையினுள் உள்வாங்கப்பட்ட விதிகளுக்கு அமைவாக குற்றமிழைத்திருப்பின் அம் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக இப்பல்கலைக்கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதுவரைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பல்கலைக்கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் குறித்த பகிடிவதைச் செயற்பாடானது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவே இடம்பெற்றிருப்பதால் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களது பெற்றோர் இதுதொடர்பில் விழிப்பாகச் செயற்படுமாறும் இப்பல்கலைக்கழகம் கேட்டுக்கொள்கிறது.
பல்கலைக்கழகத்தில் புதுமுகமாகவுள்ள மாணவர்கள் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய பணி தலையானது. மாணவர்களிடையே பகிடிவதை என்ற நச்சுக் கலாசாரம் அழிக்கப்படவேண்டியது இன்றியமையாதது. விசாரணைகள் உரிய முறையில் இடம்பெற்று தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது இதற்கு வழிசமைப்பது.
இதில் தொடபற்ற மாணவர்கள் கலங்கமின்றி கல்வியைத் தொடரவேண்டியதும் நடைபெறவேண்டும். அதற்கு சகல ஊடகங்கள் மற்றும் மக்கள் தரப்பினரது ஒத்துழைப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வேண்டி நிற்கின்றது.என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.