ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (24.02.20) ஆரம்பமானது. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 மற்றும் 40/1 ஆகிய பிரேரணைகளிலிருந்து விலகும் தீர்மானத்தை வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேரவைக்கு நாளை அறிவிக்கவுள்ளார்.
கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், ஜெனீவா சென்ற வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் கால அவகாசம் கோரிய 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையை மீள பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபத் டிவ்-பிஸ்ல்பர்கரிடம் நேரில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.