உலக தாய் மொழி தினம் –
கல்லைத் தட்டி மனிதன் நெருப்பை கண்டறிந்த நாள் முதல், மனித குழும வாழ்க்கையின் நாகரிக வாழ்விற்கான பிரவேசம் ஏற்பட்டமை கண்கூடு. இத்தகைய பிரவேசமே அடையாளம் என்ற எண்ணக்கருவிற்கான அடித்தளமாக அமையலாயிற்று. இந்தப் பின்னணியில் தான் அடையாளப்படுத்தல் அல்லது அடையாளத் தேவை என்பது முன்னையதன் வழி இயல்பாகவே தோன்றி விடுகிறது. மொழியும் அடையாளப்படுத்தலின் ஓர் அங்கமாகி, ஆரம்பகாலத்தில் வெறுமனே, ஓசையாயும், சைகையாயும், சித்திரமாயும் தொடர்பாடலை மேற்கொண்டு வந்த மனித வாழ்வியலில் பின்னாளில், ஒலியும் வரியுமாக பிரசவிக்கின்றது. இத்தகைய மொழியின் பிரசவிப்பு என்பது காலவோட்டத்தில் இயல்பின் பாற்பட்டது. எனினும், ஒலியாய் பிரசவித்த மொழி மாத்திரம், அதே காலவோட்டத்தில் நீறுபூத்த நெருப்பாய் நலிவடைந்து செல்லலாயிற்று.
இத்தகையதொரு பின்னணியில் தான் மொழி, ஒவ்வொரு சமுக குழுமத்திலும் தமக்கான அடையாளமாக அங்கிகாரம் பெறுகிறது. மேலும் விளக்கிச் சொல்லப் போனால், சமுக குழுமங்களின் இருப்பை நிர்ணயிக்கும் சக்தியாக மொழி செல்வாக்கு செலுத்தப் பிரயத்தனப்படுகிறது எனலாம். இதே சூழ்நிலையில் தான் மொழி தாய் மொழியாகவும், செம் மொழியாகவும் சமுகத்தின் பாற் அங்கிகாரம் வேண்டி நிற்கவும் தலைப்படுகிறது. இதே மொழி தான், நவ யுகத்தில் அடையாள அரசியலின் மையமாக கருக் கொண்டு வீறு நடைபோடுகிறது. விளக்கச் சொன்னால், ‘ஓரு தேசம் ஓர் அரசு’ என்ற தேசிய வாத சிந்தனையில், நவகால புரட்சியாக புரளும் ‘ பழங் குடிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளலும், மொழியை அதன் ஊடுபாவாக பயன்படுத்தலும்’ என்ற திட்டமிட்ட முன்னெடுப்பு நிலைக்கொள்ள வழிவகுத்து வருகின்றது.
இத்தகைய சமுக அரசியல் செயல் வாத நடைமுறையில், சமூக சீவியாக நின்று, பழங் குடிகளின் மொழி தொடர்பில் பிரக்ஞை நிலை அடைதல் என்பது ஈன்றளவும் சமுகத்தில் அதியுன்னத வாஞ்சையாக நிலைக் கொண்டுள்ளது. இத்தகைய நிதர்சனப் பூர்வமான தேவைப்பாடுடைய சமுகத்தில், தத்தம் மொழி அதாவது தாய் மொழி தொடர்பாக சமுகத்தில் தனிமனித அல்லது அவ்அவ் சமுக குழுமத்தின் நிலைப்பாடு தான் என்ன? என்ற வினாவோடு தளவாய் பிரதேச பழங் குடிகளுடனான சந்திப்பு நடந்தேறியது.
தளவாய் குமாரக் கோயில் பிரகாரத்தில் நடைபெற்ற இச் சந்திப்பானது, தாய் மொழி பயன்பாட்டை ஆக்கமாகவும், ஊக்கமாகவும் முன்னெடுத்து செல்லும் வகையின் பாற்பட்டதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக, மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர் குழாம் ஏற்பாட்டில், நடைப்பெற்ற இச்சந்திப்பில், பேராசிரியர்.க.ஜெயசிங்கம், கிழக்கப் பல்கலைகழக நுண்கலைத்துறை தலைவர். சு.சந்திரகுமார், நுண்கலைத்துறை விரிவுரையாளர், து.கௌரீசுவரன் மற்றும் நுண்கலைத்துறை மாணவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, குறித்த பிரதேச பழங் குடிகளாகிய வேடுவர் சமுகத்தின் மத்தியில் அவர்தம் தாய்மொழி பயன்பாடானது, சடங்குகளின் பாற்பட்டதாகவே, புழக்கத்தில் இருந்து வருகின்றமை தெளிவாகியது. குறிப்பாக உத்தியாக்கள் வழிப்பாட்டோடு தொடர்புடையதாக ஐந்துநாள் நடைபெறும் சடங்கில், ‘தெய்வங்களுக்கு உரிய மொழி இல்லையெனின், தெய்வம் அழைப்பை ஏற்காது’ என்ற மிக உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தெய்வங்களுக்கு உரிய மொழியாக அவர்தம் தாய்மொழி பயன்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த, வாழ்ந்து வரும் மக்கள் அவர்தம் வாழ்க்கையில், நதி, கடல் என வழிபாடும் இயற்கையோடு ஒன்றித்ததாகவே, அமைகின்றது. மரம் வெட்டுதல் என்பது கூடாவொழுக்கமாகி, அறமாகவே பேணப்பட்டு வருகின்றது. குறித்த சமுகத்தில் 7வது தலைமுறையை சேர்ந்த, குமாரக் கோயில் கட்டாடியாகிய வேலுபிள்ளை ( 67 வயது) குறிப்பிடுகையில், தேவர் சியா என்பவர் கொண்டு வந்த நடைமுறையாகவே குறித்த வழிப்பாட்டு முறை இருந்து வருகின்றது என்பது தெரிய வந்தது.
நதிக்கரையை அண்மித்து வாழ்ந்த மனிதன் தம்முடைய தேவைக்கு ஏற்ப இடப்பெயர்வுகளை மேற்கொண்டு, குடியேற்றங்களை அமைத்து அன்றாட சீவனோபாயத்தை நடாத்தியதான செய்தி, மெய்பிப்பினை ஈன்றளவும் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், வௌ;வேறு இடங்களில் இருந்தும், மக்கள் குழும இடப் பெயர்வு இடம்பெற்றிருப்பது ஏற்கப்படவேண்டியதே. இந்தப் பின்னணியில், தளவாய் பிரதேசமக்கள் மத்தியில் அவர்கள் தம் வழிப்பாட்டில் அதற்கான சான்றாதாரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, தீர்த்தன் வழிப்பாட்டில், குருணாகல் தீர்த்தன், மாத்தளை தீர்த்தன், பாலகங்கார தீர்த்தன் முதலிய சொற்பிரயோகங்களை எடுத்துக்காட்டலாம்.
எடுத்தும், கொடுத்தும் நிலைநிறுத்திக் கொள்ளல் என்பது மொழியை பொறுத்தவரை, இயல்பான அதே வேளை இன்றியமையாத தேவை என்றே குறிப்பிடலாம். எப்போதெல்லாம் சமுகத்தில், வணிகம், தலைத்தூக்கி நிற்கிறதோ, அப்போதெல்லாம் அதன் ஊடகமாக மொழி மிக பூடகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில், மொழி கலப்பு என்பது இயல்பாகி விடுகிறது. இந்நிலையின் இன்றியமையாமையை பழங் குடிகளின் மொழிப் பிரயோகத்திலும் காணலாம். குறிப்பாக நாமல், போமல், இந்தி மல் என சிங்கள மொழி கலப்பு, பழங் குடிகளின் மொழியில் கலந்திருப்பதை காணலாம். ( நாமல் என்றால் நாகமர பூ, போமல் என்றால் அரசமர பூ, இந்தி மல் என்றால் ஈச்சம் பூ) அவ்வாறே, பத்தினி அம்மன் வழிப்பாட்டில் தமிழ் மொழியின் கலப்பு மிகுதியாகவே காணப்படுகின்றது.
மொழி அதன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள எடுத்தலும் கொடுத்தலும் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே குறித்தவொரு மொழி நிலை பெறுடையதாக இருப்பதற்கு அதன் பிரயோக நிலையும் அவசியமாகின்றது. இத்தகைய நிலைப்பாட்டில் நின்று நோக்கின், தளவாய் பிரதேச பழங்குடி மக்கள் மொழியானது, சடங்கின் வழி வாழ்வாங்கு வாழ்கிறது எனலாம். ஏனெனில், ஏலவே சொல்லப்பட்டது போல, தெய்வ சடங்கில் தெய்வத்தோடு உரையாட அவர்தம் மொழியே ஊடுபாவாக அமைகிறது. குறிப்பாக சடங்கில் அவர் தம் மொழியானது மன்றாட்டாகவும், கொட்டு வாத்தியத்துடன் இணைந்து இசை மொழியாகவும் பேணப்பட்டு வருகிறது. இவ்வாறு மொழி சடங்கின் ஊடாகப் பேணப்படல் என்பது அக்குழுமத்தின் தனித்தவமான அடையாளமாக மொழி பேணப்படுகின்ற நிலையையே காட்டுகின்றது.
எனினும் இவற்றை நுனி புல் மேய்தல் நிலையில் நின்று நோக்கி, பழங்குடிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளலும், அதன் ஊடுபாவாக அவர்தம் மொழியை பயன்படுத்தலும் என்ற முன்னெடுப்;பில் பிரவேசிக்கும் ஒருசில மக்கள் குழுமம் அவர் தம் அடையாளமாக இவற்றை ஏற்கலாம். ஆனால், குறித்த ஒரு மொழி தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, எடுத்தலும் கொடுத்தலும் இயல்பு என்ற நிதர்சன நிலைக்கிட்டும் மட்டும் அடையாள அரசியலின் கருவாக மொழி நடைபோடத்தான் போகிறது. ஆயினும் எத்தகைய அரசியல் சூழ்நிலையிலும் தம்மை தாமாகவே ஓர்மத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளல் என்பதும் அவர்தம் மொழியின் காப்பாகவும் இருப்பாகவும் அமைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதும் நிதர்சனமே.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கலை கலசாரப்பீடம்,
கிழக்குப் பல்கலைகழகம்.