சீனாவில் தற்போது கொரோனா வைரசின்; தாக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் ஏனைய நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் 60 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் வேகமாக 31 மாகாணங்களில் பரவியதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன் 2 ஆயிரத்து 835 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரசினால் 47 பேர் உயரிழந்துள்ளதுடன் புதிதாக 427 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மொத்தமாக இதுவரை கொரோனா வைரசினால் 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 39 ஆயிரம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சீனாவில் தற்போது கொரோனா வைரசின் வீரியம் குறைந்ததனால் உயிரிழப்பவர்கள், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு 37 நாடுகளுக்கு பரவி இருந்த இந்த கொபரோ வைரஸ் தற்போது மேலும் 23 நாடுகளில் வைரஸ் பரவி உள்ளதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியா, ஜப்பான், கொங்கொங், சிங்கப்பூர், தாய்லாந்து, தாய்வான், பிலிப்பைன்ஸ், மக்காவ், வியட்நாம், மலேசியா, ஈரான், ஈராக், ஓமான், குவைத், பக்ரைன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, குரேசியா, கிரீஸ், ஒஸ்திரியா, ரஸ்யா, சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, ருமேனியா, நோர்வே, டென்மார்க், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, ஜோர்ஜியா, எகிப்து, இந்தியா, நேபாளம், இலங்கை, கம்போடியா, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், லெபனான் உள்பட 60 நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவில் இருந்து ஆசிய நாடுகளுக்கு பரவிய கொரோனா ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி அதன்பின் மேற்காசிய நாடுகள், தென் அமெரிக்க, ஆபிரிக்க கண்டங்களுக்கும் பரவி உள்ளது. அதில் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய 3 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் நேற்றையதினம் 594 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள றிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்றையதினம் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையி;ல் தென்கொரியாவில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடாக ஈரான் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி உள்ளதாகவும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஈரான் நாட்டு சுகாதாரத்துறை துணை அமைச்சர் , துணை ஜனாதிபதி ஒருவர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானில் கொரோனாவுக்கு 210 பேர் பலியாகி உள்ளதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதுடன் 820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரித்தானியாவில் 20 பேரும், அவுஸ்திரேலியாவில் 2 பேரும், ஐஸ்லாந்தில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆ;பிரிக்க நாடான நைஜீரியாவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் ஆபிரிக்க கண்டத்துக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
அதேபோல் மெக்சிகோ, பெலாரஸ், லூதினா, நியூசிலாந்து, அசர்பைஜான், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதனால் புதிதாக 6 நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. #கொரோனா #சீனா #தென்கொரியா #பாதிப்பு #ஈரான் #இத்தாலி