Home இலங்கை இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது?

இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது?

by admin


யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கான கேள்விகள்

கேள்வி:- முன்னைய அரசுகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிய போன்றவை பேசுகிறதே?

பதில்:- தேர்தல் வருகின்றது அல்லவா? அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்! கூட்டமைப்பு என்னதான் நாடகம் ஆடினாலும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள். சர்வதேச விசாரணைகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு கூட்டமைப்பு எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எவ்வாறு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்பட்டது என்பதை மனித உரிமைகள் சபையில் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எமது மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி:- வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றீர்கள்?

பதில்:- நாம் அமைத்திருக்கும் கூட்டணி பலமானது. எமது புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் வெளியிட்டுள்ளோம். எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்படவேண்டும். நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையில் நாம் செயற்படவேண்டும். இவற்றை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே நாம் முன்னெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தாமதம் ஆனாலும் இவற்றை நாம் செய்வதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கின்றோம். அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது அபிவிருத்தியை எப்படி நாம் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலும் அறிஞர்கள், புத்திஜீவிகளை ஒன்றிணைத்து எமது அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
2
ஆகவே, எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை போல அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது. எமது அபிலாiஷகளை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம். அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ்த் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. அல்லது அரசிடம் மண்டி இடுவதால் தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை. இந்த அடிப்படையில் தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூகரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள். மக்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு எம்மை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடுவோம்.

கேள்வி:- கூட்டமைப்பின் கொள்கை தவறு என்று சொல்லி வருகின்ற நீங்கள் பாராளுமன்றத்தில் சேர்ந்து செயற்பட தயாராக உள்ளதாக கூறியிருப்பது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறதே?

பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ எமது எதிரிகள் அல்லர். எமது அணுகுமுறை எப்படி இருக்கும் என்று மேலே சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். எமது இந்த அணுகுமுறையையை எவர் ஏற்றுக்கொண்டாலும் நாம் அவர்களை அரவணைத்துக்கொள்வோம். எமது அணுகுமுறைகளில் கூட்டமைப்புடன் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்கள் இடையிலான அரசியல் போட்டிகளுக்காக கண்களை மூடிக்கொண்டு வெறுமனே எதிர்ப்பு அரசியலை நாம் பொறுப்பு இன்றி செய்ய முடியாது. எமது மக்களுக்கு அவசியமான எந்த செயற்பாடுகளையும் முடிந்தளவுக்கு எல்லாக் கட்சிகளின் அனுசரணையுடனும் நாம் மேற்கொள்ள முயற்சிப்போம். உதாரணமாக எமது மக்களுக்கு எதிரான ஒரு சட்ட மூலம் பாராளுமன்றத்தில்

3

கொண்டுவரப்பட்டால், கூட்டமைப்புடனும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் இணைந்து நாம் அதை எதிர்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினை முஸ்லீம் அரசியல் கட்சிகள் கையாண்ட விதம் நல்ல ஒரு உதாரணமாகும். நாம் எமது வேற்றுமைகளின் மத்தியிலும் ஒற்றுமையைக் காணவே முயற்சிக்கின்றோம். நாம் மட்டுமே தூயவர்கள். எம்முடன் சேராவிட்டால் மற்றவர்கள் யாவரும் தவறானவர்கள் என்ற மனப்பாங்கு எமக்கில்லை. எமது கட்சியிலும் பார்க்க எமக்கு தமிழ் மக்களின் வருங்காலமே எமக்கு முக்கியமாகத் தெரிகின்றது.

கேள்வி:- இந்தியாவின் பிண்ணணியுடன் தான் உங்களது புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுக்களை வெளியிலிருக்கின்ற தரப்புக்கள் முன்வைக்கின்றனவே?

பதில்:- இது பற்றி நாம் முன்னர் ஒரு தடவை வெளிப்படையாக பதில் சொல்லி இருக்கின்றோம். நான் கட்சி தொடங்கிய பின்னர் இந்தியாவிடம் இருந்து எனது அரசியல் தொடர்பில் எந்த அழுத்தமோ அல்லது தொடர்போ இருக்கவில்லை. எனது மக்களின் அபிலாiஷகள் தொடர்பில் எந்த சக்திக்கும் அடிபணிந்து செயற்படுபவன் நான் அல்ல. இந்தியா எனக்குப் பின்னால் இருந்தால், அதனை எனது மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்வதற்கு நான் தயங்கமாட்டேன். தயங்கவேண்டிய தேவையும் இல்லை. இந்தியா என்னுடன் உறவை ஏற்படுத்தி நெருக்கமாக செயற்பட விரும்புகின்றதோ என்னவோ எனக்கு தெரியாது. இவ்வாறான இந்திய முயற்சிகள் எதுவும் இன்று வரையில் நடைபெறவில்லை. ஆனால், எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு இந்தியாவின் உதவி எமக்கு அவசியம் என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளேன். இந்தியாவை எமக்கு சார்பாக செயற்பட வைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் என்னால் முடிந்தளவுக்கு நான் எடுப்பேன். அண்மையில், ஆய்வாளர் நிலாந்தன் கூறியதுபோல, அரசியல் வங்குரோத்து காரணமாக சில கட்சிகள் கூறிவரும் சூழ்ச்சிக் கோட்பாடுகளே இவை. சேர்ந்தால் எம்மவர் சேராவிட்டால் இந்தியாவின் அடிவருடிகள் என்ற சூழ்ச்சிக் கோட்பாடு நெடுங்காலம் நின்று பிடிக்கமாட்டாது. உண்மை வெளிவந்துவிடும்.

கேள்வி:- சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதா? இல்லையா?
4

பதில்:- முடியவில்லை. நடந்தது என்ன என்ற உண்மைகளைக் கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்த எமது மக்களை அந்தளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதுதான்.

கேள்வி:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியுமா? இல்லையா?

பதில்:- முடியும். இதனை நாம் பலமுறை வலியுறுத்தி இருக்கின்றோம். பல வெளிநாட்டு சட்ட வல்லுநர்களும் இது சாத்தியம் என்று தான் கூறி இருக்கின்றார்கள்.
கேள்வி:- தெற்கு அரசியல் போக்கில் பலம் வாய்ந்த தமிழ் தரப்பொன்று நாடாளுமன்றில் தேவையாக உள்ளது.இத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்ள உங்களால் முடியும்?

பதில்:- யுத்தம் முடிவடைந்த பின்னரான கடந்த 10 வருட கால நெருக்கடி நிலையில், பாராளுமன்றத்தில் பலமான ஒரு தமிழ் தரப்பு இருக்க வேண்டும் என்று கருதித்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தார்கள். ஆனால், எமது மக்களுக்கு இதனால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இந்தப் பலத்தை வைத்து தமக்கு பதவிகளையும் சலுகைகளையும் பெற்றதைத் தவிர கூட்டமைப்பு எதனைச் சாதித்துள்ளது? ஆகவேதான் மக்களின் தெரிவில் இம்முறை மாற்றம் வேண்டும். நீங்கள் கூறிய இந்த பலத்தை வடக்கு கிழக்கு மக்கள் எமக்கு அளிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

நீதியரசர் க.வி.விக்கேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை
தலைவர், தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணி
28.02.2020

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More