216
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும்,அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை (6) காலை மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் குறித்த பேரணி இடம் பெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்து கவணயீர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் குறித்த பேரணியில் சென்றவர்கள் ஒன்று சேர்ந்தனர்.இதன் போது பேரணியில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள். குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்கள் அரசியல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டு ஆண்டாண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். அவர்களது நெடுங்கால தடுத்து வைப்பினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள்.
குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் பல இன்னல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்த நிலையில் சிறையில் நீண்ட காலம் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க தமது கோரிக்கையை முன் வைத்ததோடு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரியும்,அரசியல் கைதிகளான தமது உறவுகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய ஜனாதிபதி,பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரசியல் கைதிகளின் பிள்ளைகள், உறவினர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். #பயங்கரவாததடைச்சட்டம் #மகளிர்தினம் #வடமாகாணம் #அரசியல்கைதிகள் #கவனயீர்ப்புப்பேரணி
Spread the love