கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான இலங்கையை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதனை உறுதி செய்வதற்காக MRI பரிசோதனை செய்ய உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 52 வயதுடைய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் ஒருவரே இவ்வாறு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார். குறித்த நபர் இத்தாலி நாட்டு குழு ஒன்றிற்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த இடம் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.