ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தடை இருக்கும் நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு சில காளை மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டதால், அங்கு பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அங்கு இளைஞர் கூட்டம் அதிகமானதால் காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் இதனால் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்ற தகவல் ஏற்கனவே பரவியதால் நேற்று முதல் அங்கு பலத்த போலிஸ் காவல் இடப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழகத்தின் பல இடங்களில் தடை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில், இன்றும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதேவேளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் திரைப்பட இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.