(க.கிஷாந்தன்)
நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊடரங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவதுடன், வாகனங்களை கைப்பற்றுவதற்கும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே, இக்காலப்பகுதிகளில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் டயகம, அக்கரபத்தனை, லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, பூண்டுலோயா, கொத்மலை, திம்புள்ள – பத்தனை, ஹட்டன், வட்டவளை, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளில் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய தோட்டப்பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தலவாக்கலை நகரில் பேருந்து தரிப்பிடம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை தலவாக்கலை –லிந்துலை நகர சபையால் இன்று (22.03.2020) முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை மற்றும் லிந்துலை பகுதிகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதார பிரிவினர் பணியில் ஈடுபட்டனர். #பெருந்தோட்டப்பகுதி #பாதுகாப்பு #வேலைத்திட்டம் #ஊடரங்குச்சட்டம்