163
உள்ளூராட்சி சபைகளை உடனே கூட்டி சபை நிதிகளை பெற்று சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகர சபை உறுப்பினராக நான் இருந்த கால கட்டத்தில் அன்றைய முதல்வரான யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது , யாழ்.மாநகர மக்கள் சார்பாக, சபை நிதியில் இருந்து நன்கொடை வழங்கினோம். அதேபோல தென்மாகாண மக்களுக்கும் நன்கொடைகள் வழங்கி இருந்தோம்.
அந்த வகையில் ஏனைய மாகாணங்களுக்கு எங்களுடைய சபையால் நிதி வழங்க சட்ட ஏற்பாடுகள் இருக்கும் போது , எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மக்கள் குறிப்பாக கடற்தொழில் செய்யும் சாதாரண தொழிலாளிகள் தற்போதைய நிலையில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
அதேபோன்று கட்டட தொழிலாளிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினர் இன்றைய சூழலில் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடிகளை எதிர்நோக்கி இருக்கின்றனர். அவர்களுக்கு சபை நிதியில் இருந்து உதவ முடியும்.
எனவே மாநகர சபை மாத்திரமின்றி யாழ்.மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் கரிசனை கொண்டு சபையின் நிதியினை கொண்டு உழைக்கும் வர்க்கத்திற்கு உங்களுடைய உதவிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு உள்ளூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இதற்கு கட்சி பேதமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் சிந்தனையில் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும்.
நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மதியம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது. மீண்டும் அமுலுக்கு வரவுள்ள ஊரடங்கு வெள்ளிக்கிழமை காலை வரையில் நீடிக்கும். எனவே இக் கால பகுதியில் உழைக்கும் வர்க்கத்தினர் பெரும் சாவல்களை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்கு குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளையாவது வழங்க முன் வர வேண்டும்.
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு வருடாந்திரம் தலா 40 இலட்ச ரூபாய் அவர்களின் வட்டார அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும். எனவே அனைத்து உறுப்பினர்களும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து மாநகர சபை கூட்டப்பட்டு உடனடியாக மக்களுக்கு சேவை செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும்.
மாநகர சபை மாத்திரமின்றி ஏனைய உள்ளூராட்சி சபைகளும் விரைந்து செயற்பட வேண்டும். எனவே கட்சி வேறுபாடு இன்றி கட்சியின் சுய நலன்களை பாராது சபைகளை கூட்டி உடனடியாக நடவடிக்கைகளை எடுங்கள்.
சபை கூட்ட அவர்கள் தயார் இல்லை எனில் வாக்காளர்கள் ஆனா இளைஞர் யுவதிகள் உங்கள் வட்டார உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து சபையை கூட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.
இலங்கையில் முன்னுதராமாக யாழ்.மாநகர சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே உடனே சபையை கூட்டி உறுப்பினர்களின் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உறுப்பினரான மாநகர சபை உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்படும் 40 இலட்சத்தையோ அல்லது 20 இலட்ச ரூபாயை இந்த நிவாரண பணிக்கு ஒதுக்க நாம் தயாராக உள்ளோம்.
எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனே விரைந்து நடவடிக்கையில் இறங்கி இலங்கையில் முன்னுதாரணமாகம செயற்பட வேண்டும். உள்ளூராட்சி சட்ட விதிகளுக்கு ஏற்ப நிச்சயமாக இதனை செய்ய முடியும். என தெரிவித்தார். #உள்ளூராட்சிசபை #வறியமக்களுக்கு #உலர்உணவு #சுதர்சிங்விஜயகாந்த்
Spread the love