கொரோனா வேகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட 12 முதியோர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதியோருக்கு கொரோனா வைரஸ் எளிதாக தொற்றிக்கொள்ளும் என்பதால் முதியோர்; இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் நிலை குறித்து கண்டறிய அந்த நாட்டு அரசு ராணுவ வீரர்களின் குழுக்களை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியது.
இந்தநிலையில் தலைநகர் மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் பல இல்லங்களில் முதியவர்கள் கவனிக்க ஆளில்லாமல் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததனை கண்டுள்ளனர்.
அதிலும் சில இல்லங்களில் முதியவர்கள் படுக்கையிலேயே இறந்து காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் முதியோர் இல்லங்களில் இருந்த பராமரிப்பாளர்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதியவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு காணப்பட்ட 12 முதியவர்கள் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் படுக்கையிலேயே தங்கள் உயிரை விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த முதியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘இந்த மாதிரியான மனிதாபிமானமற்ற செயல்களை அரசு சகித்துக்கொள்ளப்போவதில்லை. தங்கள் கடமைகளைப் புறக்கணிக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள். வைரஸ் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் முதியோர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் ‘ என ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் மரியா லூயிசா கார்சிடோ தெரிவித்துள்ளார் #ஸ்பெயின் #முதியோர்இல்லங்கள் #கவனிப்பாரற்று #முதியவர்கள் #கொரோனா