குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன ஒடுக்குமுறை சட்டம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுலியன் ஹில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இன ஒடுக்குமுறை சட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் பொருளாதார அபிவிருத்தி, கல்வி மற்றும் இன ஒடுக்குமுறைகளை தவிர்த்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்துவது அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதி செய்ய வழியமைக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஹில் ஊடகங்களும் இன ரீதியில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் அதேவேளை, இன்னுமொரு இனத்தை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறான வகையிலேயே அவுஸ்திரேலியாவில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன ஒடுக்குமுறையை தடுப்பதற்கு தனியான சட்டம் உருவாக்கும் யோசனை வரவேற்கப்பட வேண்டியது எனவும் இது நல்ல பலனை அளிக்கும் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன ஒடுக்குமுறைகள் குறித்து அவதானிக்க தனியான ஒர் பிரிவு இலங்கையிலும் உருவாக்கப்படுவது காத்திரமானதாக அமையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.