ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி அத்துல டி சில்வா தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை நகரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர் கடந்த 18 ஆம் திகதி தியத்தலாவ வைத்தியசாலைக்கு சென்று அங்கு சுமார் பல மணித்தியாலங்களை கழித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வேளையில் அவர் வைத்தியசாலையின் மருந்து கொடுக்கும் இடத்தில் பல மணித்தியாளங்கள் இருந்தமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அவருடன் இருந்தவர்களை பண்டாரவளை பொலிஸார் அழைத்துள்ளனர்.
80 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்த போதும் 9 பேர் மாத்திரமே பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி அத்துல டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி அத்துல டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் அநுராதபுரம் மாவட்டத்தில் கலேன்பிந்துனுவௌ, கஹாடகஸ்திகிலிய மற்றும் ஹொரவபொத்தான ஆகிய நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கண்டி, அக்குரணை பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் மேற் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேருவளை பன்னில பகுதியில் ஒரு கொரோனா நோயாளி இனம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த கிராமவாசிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்கு எவருக்கும் அனுமதியில்லை என பேருவளை பொலிஸார் அததெரணவிற்கு தெரிவித்தனர்.