உலகம், மனிதர்கள் இல்லாமல்
வாழத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது…..
மனிதர்களோ,
தம் ஊனக்கண்ணையும், ஞானக்கண்ணையும்,
அறிவுக்கண்ணையும்
கந்தல் துணிகளாலும்,
கண்ணறைத் துணிகளாலும்
மூடத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்….
தொற்றின் தற்காப்பிலும், அச்சத்திலும்
தனித்து மனிதர் வாழும் வேளையில்,
இங்கிதம் ஏதும் இல்லாமலே
சாத்திரிமார்
இராசி பலன்களை,
வானலைகளில்,
இழுத்தப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்….
உலகம், மனிதர்கள் இல்லாமல்
வாழத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது……
மதகுருமார்களோ
பெருமக்கள் வணிக அனுசரணையில்,
பிரார்த்தனை, பூசை புணஸ்காரங்களென
கடவுளருக்கு மனுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…
உலகம், மனிதர்கள் இல்லாமல்
வாழத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது…..
யாரோ எவரோ சாகடிக்கப்படும் அனர்த்தகாலங்களில்,
அடைக் காத்திருந்து மீளவரும் கனவுகளில்
கல்வி புலத்தார்.
நடைபெறுவது என்னவென்றே
அறியமுடியாத பாடப்பரப்புகளில்,
இணையவழிக் கல்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்…
உலகம், மனிதர்கள் இல்லாமல்
வாழத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது…..
கொள்ளை நோய் பரபரப்புகளில்,
வெகுசன ஊடகத்தார்,
கொள்ளைக் கொள்ளும் புள்ளிவிபரங்களிலும்,
அறிவுறுத்தல், எச்சரிக்கைகளிலும்
சுருங்கிக்கிடக்கிறார்கள்…..
அறிவின் வாசல் வழி
ஈடுப்பாட்டுடனான ஒரு பயணம்
எம்முன் விரிந்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் எங்களை எங்கேயோ
இட்டுச் செல்லத் தலைப்பட்டுக்
கொண்டிருக்கிறோம்..
உலகமோ,
மனிதர்கள் இல்லாமல்
வாழத் தலைப்பட்டுக்கொண்டிருக்கிறது…..
அறிவின் வாசல் வழி
ஈடுப்பாட்டுடனான ஒரு பயணம்
எம்முன் விரிந்துக் கொண்டிருக்கிறது.
சி.ஜெயசங்கர்.