அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலங்களில் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் நகருக்கு வந்து நாளாந்த உணவுத் தேவைகளுக்காக பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். நகரில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாவனையாளர் அதிகார சபைக்கு மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை (16) காலை 6.00 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகள் சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வியாபார நிலையங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை(15) கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகள் தொடர்பில் மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன் போதே பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இந்த தகவல்களை தெரிவித்தனர். பொதுமக்களை ஏமாற்றி விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இது சட்டத்தை மீறும் செயலாகும். அத்தியாவசிய பொருட்களும் வியாபார நிலையங்களில் வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்கின்றனர்.இதனை தடுக்க வேண்டும்.தற்போது செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை சில வர்த்தகர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு அதிகார சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தை மீறுவோர் மீது நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர எமக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் நிறைவேற்றுவோம். என்றும் தெரிவித்தனர்