உலகிற்கு ஆகாத ஒற்றை மையம்
உலகம், வரைபடங்களுடன் உருவாகியதில்லை.
ஆதியில் மனிதர்,
சொர்க்கத்தையும், நரகத்தையும் உருவாக்கியது போல்,
பின்வந்த மனிதர்
தங்கள் வரைபடங்களை உருவாக்கிக் கொண்டனர்.
பல நோக்கங்கள், பல தேவைகள்
பல உலகங்கள், பல உலகவரைப்படங்கள்
இறுதியில், உலகத்தின் வரைபடம்
ஒன்றே ஒன்றாயிற்று.
ஒற்றை உலகின் வரைபடம் அது,
ஓரிடத்தில் குவியம் பெற்ற,
ஒற்றை உலகின் வரைபடமாயிற்று.
குவியத்தில் இருந்து, உலகம்
காட்டப்பட்டது : பார்க்கப்பட்டது
பாலபடிப்பாகி, பள்ளிப் படிப்பாகி,
பட்டப்படிப்பாகி, பட்டப் பின் படிப்பாகி
ஈற்றில்,
ஒற்றை உலக வரைபடம் உலகமாயிற்று.
வரையப்பட்ட கோடுகளின்
கீழும் மேலுமாய்
உண்மைகள் புதைக்கப்பட்டன.
குரோதங்கள் புனைந்து வளர்க்கப்பட்டன.
வேட்டைக்காரர்களின் வெறிக் கொண்டாட்ட மேசையில்
வெட்டிப் பிரித்துப் பங்குபோடப்பட்ட
வறுத்தெடுத்த வான்கோழியோ உலகம்?
உருண்டைப் புவிமீதில்
உலகங்கள் பல கண்டீர்!
சி.ஜெயசங்கர்.
அறிந்து சொல்வீர் குழந்தைகாள்
இலுப்பை மரத்தின் கதையிது
அறிய நல்ல கதையிது
எளிய தமிழின் மொழியிலே
இளைய எனது நண்பர்கள்
பாடியாடி மகிழுங்கள்
பாட்டின் பொருளும் அறியுங்கள்
இலுப்பை நிழலின் குளிர்மையில்
இருந்து மகிழ்ந்த நினைவுகள்
இருக்கிதெந்தன் மனதிலே
இன்னும் நல்ல பசுமையாய்
குரும்பைத் தேரில் அழகுகூட்ட
ஈர்க்கில் கோர்க்கும் போதிலே
இலுப்பம் பூவின் மணத்திலே
கிறங்கும் அந்தக் கணத்திலே
பிறக்கும் வண்ணக் கனவுகள்
பறக்கும் பட்டாம் பூச்சிகள்
விருட்சமாகி விதையும் தந்து
வாழ்வு சிறக்க வைத்த – அந்த
இலுப்பை எங்கு போனது?
இருக்கும் இடத்தை அழித்துப் பிடிக்கும்
இப்பில் இப்பில் வந்ததேன்?
அறிந்து கொள்வீர் குழந்தைகாள்
அறிந்து சொல்வீர் குழந்தைகாள்
– சி.ஜெயசங்கர் –